
மனதை பதற வைக்கும் கொடூர சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. ரேவா மாவட்டம் மங்காவன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், பிரியா குப்தா என்ற பெண் தனது இரண்டரை மாத குழந்தை லக்ஷ்யா என்பவரை கழுத்தை நெரித்து கொன்றது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த கொலை ஜனவரி 6, 2023 அன்று நடந்ததாகத் தெரியவந்துள்ளது. கொலை செய்த பின்பு, “என் குழந்தை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டான்” என சொல்லி இரண்டாண்டுகளாக அந்த பெண் தனது குடும்பத்தையும், காவல்துறையையும் தவறாக வழிநடத்தி வந்துள்ளார்.
குழந்தையின் தந்தை பிரகாஷ் குப்தா தனது மனைவியின் பேச்சில் சந்தேகம் கொண்டு, அவரை விட்டு விலகி தனியாக வாழ்ந்து வந்தார். தனது குழந்தை இயற்கை மரணம் அடையவில்லை, இது ஒரு திட்டமிட்ட கொலை என அவர் தெளிவாக நம்பினார்.
அதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தை தொடர்ச்சியாக நாடி நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டார். இறுதியாக, அவர் தனது மனைவியுடன் நடந்த மொபைல் உரையாடலை பதிவு செய்து அதனை ஆதாரமாக சமர்ப்பித்தார்.
பிரியா – பிரகாஷ் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒரு முக்கிய சாட்சியாக இருந்தது. அந்த உரையாடலில், குழந்தையின் இறப்பு குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றவாளி தனது செயலை ஒப்புக்கொள்கிறார். இந்த ஆடியோ பதிவு, பிற மருத்துவமனையின் சான்றுகள், பிரேத பரிசோதனை அறிக்கை, மற்றும் பிரகாஷ் குப்தா அளித்த மேலதிக ஆதாரங்களை வைத்து, FSL போபால் ஆய்வு மேற்கொண்டது.
இதையடுத்து, போலீசார் பிரியாவை கடுமையாக விசாரித்தனர். விசாரணையின் போது, பிரியா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் கொண்டு, கோபத்தில் இருந்த போது குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில், குழந்தை விழித்ததையடுத்து, கோபத்தில் இருந்த பிரியா பால் கொடுத்துள்ளார். ஆனால் குழந்தை பாலை வாந்தி எடுத்துவிட்டது. இதனால் அவரது கோபம் மிகுந்துவிட்டது. அதன் பின் குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொன்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், குழந்தையின் உடலை போர்வையால் மூடி, “நோயால் இறந்துவிட்டார்” எனச் சொன்னுள்ளார். ஆனால், கணவர் தொடர்ந்த முயற்சியில் இறுதியாக உண்மை வெளிப்பட்டது. பிரியா குப்தாவின் வாக்குமூலம் மற்றும் அனைத்து ஆதாரங்களையும் பெற்று, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கிருந்து அவரை சிறைக்கு அனுப்பும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச்சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாயின் கைகளில் தனது பிள்ளையின் உயிர் பறிக்கப்படும் அளவுக்கு கோபமும், சந்தேகமும் தாக்கம் செய்யக்கூடியது என்பது மனித மனத்தின் தீவிரத்தை பறைசாற்றுகிறது. இப்பொழுது, 2 ஆண்டுகளாக நீதிக்காக நம்பிக்கையுடன் போராடிய தந்தைக்கு, தன் மகனுக்கான நீதி கிடைத்துள்ளது என்பது தான் சின்ன அதாந்தை.