
திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் சுமார் 500 பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. தென் மாவட்டங்கள் முழுமையாக மூழ்கி போயிருக்கின்றன. பல்வேறு இடங்களில் தீவு போல் காட்சியளிக்கிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மக்கள் இருக்கக்கூடிய குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் முழுமையாக சூழ்ந்திருக்கிறது. மக்களுடைய அன்றாட வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி இருக்கிறது.
இதன் காரணமாக காலையிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவை அனைத்துமே நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தான் ரயில் எண் 20606 திருச்செந்தூர் முதல் சென்னை எழும்பூர் வரை செல்ல கூடிய ரயில் செந்தூர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்க கூடிய ரயில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு இருக்கிறது.
புறப்பட்ட ரயில் ஆனது மழை காரணமாக ஆங்காங்கே பாதைகளில் விரிசல் ஏற்பட்டு மழை – வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்திய ரயிலில் கிட்டத்தட்ட 800-க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதில் 300 பயணிகள் மீட்கப்பட்டதாகவும், தொடர்ந்து 500 பயணிகள் இன்னமும் அந்த ரயிலில் சிக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலாவதாக மீட்கப்பட்ட 300 பயணிகளை அருகே உள்ள கேஜிஎஸ் அரசு ஆண்கள் பள்ளியில் பத்திரமாக கொண்டு சேர்த்திருப்பதாகவும், தொடர்ந்து இருக்க கூடிய 500க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலும், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அந்த ரயில் நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட சேவைகளை கொடுப்பதற்காக NDRF டீம் உடனடியாக அங்கு சென்று இருப்பதாகவும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களும் நேரடியாக களத்திற்கு சென்று இருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் கொடுத்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் தென்னக ரயில்வே வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே தற்போது 500 பயணிகள் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அவர்களை மீட்பதற்கு தற்போது படகுகள் மூலமாக NDRF அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சென்று இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் துரித நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்ததாகவும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.