
வங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரியில் முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மே 29ஆம் தேதி வரை மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.