தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் பேச அனுமதி கொடுக்காததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதாவது இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த தியாகி என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். முன்னதாக தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்ததாக செய்தி வெளியிட்டது. இந்த தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. டாஸ்மாக் ஊழலை கண்டித்து தான் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த தியாகி என்று பேட்ஜ் அணிந்து வந்தனர்.

இது தொடர்பாக சட்டசபையில் பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய நிலையில் சபாநாயகர் அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு பேச அனுமதி தர முடியாது என்று கூறிவிட்டார். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அவையை விட்டு சபாநாயகர் வெளியேற்றினார். இதைதொடர்ந்து இன்று எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினரை ஒரு நாள் மட்டும் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்பும் சமீபத்தில் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.