
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த தாக்குதலை இந்தியா முறியடித்தது அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஜம்மு அருகே சம்பாவில் பாகிஸ்தான் இரண்டாவது நாளாக அத்துமீறி உள்ளது. இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியை தொடங்கியுள்ளதால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அந்த தாக்குதலை முறியடித்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் பட்டன் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான சாந்தல்பூர் தாலுக்காவின் கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை (Blackout) அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்கள் நடந்து கொள்ள வேண்டும், வதந்திகளை நம்பாமல், அரசுத் துறை வெளியிடும் அறிவுறுத்தல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று மாநில முதலமைச்சரின் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது நிலவும் பதற்ற நிலைமையை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.