தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு அரசு தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படுகிறது. இது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2.20 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் என்று தற்போது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நா. சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனவரி 9-ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் இந்த முறை 1000 ரூபாய் பணம் வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.