தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபை கூட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வரும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினார். அந்த சட்டத்தின்படி இனி பெண்களைப் பின்தொடர்ந்தால்  5 வருடங்கள் வரை சிறை தண்டனையும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனையும் ஆசிட் வீச்சு  உள்ளிட்ட சம்பவங்களுக்கு 10 வருடம் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழகத்தில் 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதன்படி சென்னை, சென்னையின் சுற்றுப்புற பகுதி, திருச்சி, மதுரை, நெல்லை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு பாலியல் குற்ற வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத அளவுக்கு சிறை விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்றும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விரைந்து முடிக்க மாவட்டங்கள் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.