காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில் 9 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தவில்லை என இந்திய அரசு குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் விளக்கம் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்தவர்களை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியதற்கான ஆதாரமும் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பது தான் அவர்களது நோக்கம். பஹல்காம் தாக்குதல் நடந்து 15 நாட்களாகியும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீவிரவாதிகளை தண்டிக்கவே இந்தியா இந்த தாக்குதலை நடத்திய நிலையில் தீவிரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டது.

அவர்களை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மோதலை வளர்க்கும் விதமாகவோ அல்லது போரை ஏற்படுத்தும் விதமாகவோ இந்த தாக்குதல் நடைபெறவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு ரெசிடென்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு லஸ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடையது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு இதில் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்தியாவில் மேலும் சில இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களை சந்திக்க இந்தியா தயார் நிலையில் இருக்கிறது என்றும் அந்த சதி திட்டம் முறியடிக்கப்படும் என்றும் கூறினார்.