
கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். அதோடு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த செழியன் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதில் சாருமதி மற்றும் செழியன் உடன்பிறந்த அக்கா தம்பி. தங்களுடைய இரு பிள்ளைகளையும் இழந்து பெற்றோர் வேதனையில் தவிக்கிறார்கள். இதன் காரணமாக பலி எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா என்பவரை ரயில்வே சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் மூவரும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாமி சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்த நிலையில் பள்ளி வாகனம் உதவியாளர் இல்லாமல் இயக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் ரயில்வே நிர்வாகம் தனித்தனியாக 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.