
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழையின் காரணமாக தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கேஆர்பி அணையின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்த அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.