பாகிஸ்தானுடனான எல்லை பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 தொடரை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மே மாதத்தில் போட்டி மீண்டும் தொடங்க அரசாங்க அனுமதி கிடைத்தால், மீதமுள்ள 16 போட்டிகளை நடத்த பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களை BCCI பட்டியலிட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மைதானங்கள் தயாராக வைத்துள்ளதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேநேரத்தில், IPL தொடரின் மீதமுள்ள ஆட்டங்களை மே மாதத்திற்குள் நடத்த முடியுமா அல்லது வருடத்தின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்க வேண்டுமா என்பது குறித்து BCCI இதுவரை தெளிவுபடுத்தவில்லை. போட்டி மீண்டும் தொடங்குமாயின், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அழைத்து வருவது மிகப்பெரிய சவாலாக உருவாகியுள்ளது. ஏற்கனவே, பல வீரர்கள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டனர். சனிக்கிழமைக்குள் பெரும்பாலானவர்கள் விலகுவார்கள் என்றும், மே இறுதியில் தொடங்கினால் சிலர் திரும்ப வாய்ப்பு உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை IPL 2025-ல் 57 போட்டிகள் முடிவடைந்துள்ளன. 58-வது ஆட்டம் தர்மசாலாவில் மே 8 அன்று நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு காரணமாக 10.1 ஓவர்கள் கழித்து நிறுத்தப்பட்டது. அந்த போட்டி மீண்டும் நடத்தப்படுமா என்றதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 12 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளேஆஃப் ஆட்டங்கள் மீதமுள்ளன. முதலில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் பிளேஆஃப் மற்றும் இறுதி ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அந்த திட்டங்களிலும் மாற்றம் வரும் வாய்ப்பு உள்ளதாக BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.