
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டில் விமர்சையாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சிக்கொடி விளக்கம் கொள்கைகள் பற்றி விஜய் விரிவாக பேசினார். அதன் பிறகு தமிழக அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. அதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும் விஜய் மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று இரண்டாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விஜய் கட்சியின் கொள்கை தலைவர்கள் சிலைகளை திறந்து வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிலையில் தவெக நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். உத்தரகாண்டில் நடக்கும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக அணியின் ஒருங்கிணைப்பாளராக பங்கேற்றிருப்பதால் தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.