
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. அப்போது எஃப்ஐஆர் வெளியானதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில் அரசின் அனுமதி பெறாமல் பேட்டி கொடுத்த சென்னை கமிஷனர் அருண் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அந்த மாணவி கல்லூரி படிப்பை முடிக்கும் வரை கட்டணம் எதுவும் வாங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. அதோடு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றரிக்கை அனுப்பி உள்ளது. அதாவது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வெளிநபர்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இனி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும்போது மாணவர்கள் அடையாள அட்டை அணிந்து இருப்பது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பயோ மெட்ரிக் வருகை பதிவேடு கட்டாயமாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்தையும் பல்கலைக்கழகங்கள் மிகவும் கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.