
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்களது மகன் கவின்சங்கர் தன்னுடைய பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லி வீட்டில் சென்று பார்க்குமாறு கூறினார்.

அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டை திறந்த போது கணவன் மனைவி இருவரும் சடலமாக கிடந்ததும் 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதும் தெரியவந்த நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பான வழக்கில் 12 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காவல்துறையினர் இந்த கொலை வழக்கில் மூன்று பேரை கைது செய்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவரை கைது செய்துள்ளனர். அதன்படி ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மீது ஏற்கனவே 19 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஞானேஸ்வரன் நகைக்கடை உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் மூவரும் கொள்ளையடிக்கும் நகைகளை விற்று கொடுப்பதை ஞானேஸ்வரன் வேலை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் பகலில் வேலைக்கு போகும் நிலையில் இரவு நேரத்தில் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதேபோன்று கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டம் பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். அதாவது தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, அவர்களது மகன் செந்தில்குமார் ஆகிய மூன்று பேரை கொடூரமாக அடித்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிவகிரி மற்றும் பல்லடம் கொலை இரண்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் ஒரே குற்றவாளிகள் தான் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது மாவட்ட கண்காணிப்பாளர் தற்போது செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அவர் சிவகிரி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதாக கூறிய நிலையில் அவர்களிடம் இருந்து கொலை செய்யப்பட்டவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நகைகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.