தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இந்த வாலிபர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 காவலர்களை மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

அதாவது மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிக்தா (41) மற்றும் அவருடைய தாயார் சிவகாமி (75) ஆகியோர் மடப்புரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த காவலாளி அஜித்குமார் (28) என்பவரிடம் கார் சாவியை கொடுத்து அதனை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அவருக்கு கார் ஓட்ட தெரியாததால் வேறொருவரிடம் சாவியை கொடுத்து ஓரமாக நிறுத்தினார். பின்னர் அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்ததும் அஜித்குமார் சாவியை கொடுத்தபோது அந்த பெண் காரில் இருந்த 9 சவரன் நகைகளை காணவில்லை என்றார். இது பற்றி அந்தப் பெண் அஜித்குமாரிடம் கேட்ட நிலையில் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

இதன் காரணமாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் அஜித்குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில்  திடீரென அவருக்கு உடல் நலக்குறைவை ஏற்படவே ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித்குமாரை மேல் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வாலிபர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

இது தொடர்பாக அஜித்குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிந்த நிலையில் அவர்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து  மாவட்ட எஸ்பி ஆறு போலீசாரை சஸ்பெண்ட் செய்த நிலையில் தற்போது 5 போலீசாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அஜித் குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜித்குமார் உடம்பில் 18 காயங்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.