
கோவா மாநிலம் பஞ்சிமை அருகே உள்ள ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைரை தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஷிர்காவ் யாத்திரை’ விழாவில் இந்தாண்டு ஒரு பெரும் விபத்து நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த யாத்திரையின் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரிதாபகரமான சம்பவம் மே 2ஆம் தேதி நடந்திருக்கிறது. அதிகாலையில் கோவிலுக்குள் நுழைவதற்காக போட்டியிட்ட பக்தர்களின் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது நடந்த தள்ளுமுள்ளு மற்றும் குழப்பத்தில் பலர் கீழே விழுந்து, கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர். காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, பஞ்சிம் மற்றும் மாப்சாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அதோடு உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையை இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.