18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதியது. ஏற்கனவே முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற சிஎஸ்கே அதற்கு அடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 77ரன்கள் வரை எடுத்த நிலையில், சென்னை அணியில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் தொடர்ந்து தடுமாறினர். கடைசியாக எம்எஸ் தோனி மற்றும் விஜய் சங்கர் இருவரும் களத்தில் இருந்த நிலையில் விஜய் சங்கர் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 68 ரன்கள் எடுத்த நிலையில்  தோனி 30 ரன்கள் வரை எடுத்திருந்தார். இருவரும் களத்தில் நின்று இறுதி வரையில் போராடியும் அவர்களால் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது. இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே டெல்லி அணியிடம் தோல்வியை சந்தித்தது. மேலும் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்திலேயே தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.