
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் கூட்டுறவு இளங்கோவன். இவர் சேலம் மாவட்ட புறநகர் ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தவர். இவருக்கு சொந்தமான கல்லூரிகள் முசிறியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் அவருக்கு சொந்தமான எம்ஐடி பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் உட்பட 11 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தற்போது இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.