காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் பிப்ரவரி எட்டாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பல நிர்வாகிகள் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைமை அதிமுகவுக்கு ஆதரவளிக்கவே விரும்புகின்றது. ஆனால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் இருக்கிறது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே இன்றைய கூட்டம் முடிவடைந்தது.