
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.
இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக போர் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. சென்னை டிஜிபி அலுவலகம் அருகே தொடங்கும் பேரணி போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவடையும்.
முன்னாள் ராணுவ வீரர்கள் அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளனர். இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு, தேச ஒற்றுமையை போற்றும் வகையில் இந்த பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.