
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக இந்தியா வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு சிந்து, ஷெனாப் உள்ளிட்ட நதி நீரையும் நிறுத்தியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ததோடு எல்லையில் வீரர்களை குவித்து வைத்து தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதற்கு அவ்வப்போது இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நாடு முழுவதும் நாளை மத்திய அரசாங்கம் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதாவது போர் நடந்தால் மக்களை பாதுகாப்பது தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாககுறிப்பாக வான்வெளி தாக்குதல் நடந்தால் அதனை எச்சரிக்கும் வகையில் சைரன் ஒலிக்க வேண்டும்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது,
தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய நான்கு இடங்களில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது மற்றும் வெளியேற்றுவது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.