காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இந்தியாவும் பதில் தாக்குதல் கொடுத்ததோடு அவர்களின் அத்தனை தாக்குதல்களையும் முறியடித்தனர்.

கிட்டத்தட்ட 3 நாட்களாக போர் நடைபெற்று வந்த நிலையில் பின்னர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் போர் முடிவடைந்தாலும் ஏற்கனவே சிந்து நதிநீர் நிறுத்தம் உள்ளிட்ட அறிவிப்புகள் வாபஸ் பெறப்பட மாட்டாது என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளுடனும் வர்த்தக உள்ளிட்ட உறவுகளை முறித்து வருகிறது.

அந்த வகையில் ஆசிய கிரிக்கெட் கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் ஆசிய கிரிக்கெட் போட்டி உட்பட அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணி விலகுவதாக தற்போது பிசிசிஐ மின்னஞ்சல் மூலமாக செய்தி அனுப்பியுள்ளது. மேலும் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை மற்றும் நடைபெற இருக்கும் ஆடவர் ஆசிய கோப்பை இரண்டிலும் இருந்து பிசிசிஐ விலகி உள்ளது.