
தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இதற்காக மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மொத்தம் 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறு வரையறை தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.இந்நிலையில் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அண்ணாமலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, கற்பனையான அச்சங்களை பரப்பவும், பொய் சொல்லவுமே அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்.
தொகுதி மறுவறையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார். தெளிவான விளக்கத்திற்கு பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏற்புடையதல்ல என கூறியுள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்காது என அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்தார். அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என அறிவித்திருந்த நிலையில் பாஜக, நாதக கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.