
ஹைதராபாத் சார்மினார் அருகேயுள்ள மிர்சவுக் பகுதியில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 9 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் காலை 6.30 மணியளவில் நடந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அழைப்பு வந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயில் சிக்கிய பலர் வெளியேறும் வழிகளை அறிய முடியாத நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து விசாரணை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில், சிசிடிவி பதிவுகள், சாட்சிகள் மற்றும் கட்டிட உரிமையாளரின் தகவல்களை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, “இது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவிக்கான முயற்சிகளை பிரதமரிடம் பேசி மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார். முதல்வர் ரேவந்த் ரெட்டியும் தமது இரங்கலை தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.