சென்னை கொடுங்கையூர் பகுதியில் பாலமுருகன் கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புகழ்வேலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் கவுசல்யா மற்றும் அவருடைய குழந்தையுடன் வியாசர்பாடியில் இருந்து அசோக் பில்லர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பாலமுருகன் குழந்தையை முன்னாள் அமர வைத்த நிலையில், திடீரென மாஞ்சா நூல் காத்தாடி குழந்தையின் கழுத்தை சுற்றியது. இதையடுத்து அந்த குழந்தையின் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனை பார்த்த பாலமுருகன் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவருக்கு கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதே போன்று அதே பகுதியில் ராமாபுரத்தைச் சேர்ந்த திலானி பாஷா என்பவர் கழுத்திலும் மாஞ்சா கயிறு அறுத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மாஞ்சா நூல் காத்தாடி விட்டது யார்? என்று தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர், பள்ளி மாணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்திலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட பட்டங்கள், லொட்டாய் மற்றும் மாஞ்சா நூல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.