இன்றைய காலகட்டத்தில் திருமண வரன் தேடுவதற்கு பலரும் இணையதளம் மூலம் தங்களது சுய விபரங்கள், புகைப்படங்கள், வேலை வாய்ப்பு, சம்பளம் போன்றவற்றை பதிவிட்டு வரன் தேடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணையதளத்தில் போலி  சுய விவரங்களை பதிவு செய்து  போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் ஊடுருவி உள்ளதாக சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 379 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி வரன் தேடுபவர்கள் தங்களது வலையில் சிக்கினால் அவர்களிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவது போன்று ஆசை வார்த்தை  கூறி பேசி திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கை முறை போன்றவற்றை எடுத்துக் கூறி இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி ஆன்லைன் முதலீடு செய்வதற்கு வற்புறுத்துகின்றனர்.

அதன் பின்னர் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி இணையதளம் முகவரியை வரன் தேடுபவர்களிடம் பரிந்துரை செய்து முதலீடு செய்தால்  லாபம் கிடைக்கும் எனக் கூறி குறிப்பிட்ட பணத்தொகையைப் பெற்று முதலில் லாபத் தொகையை திருப்பி கொடுப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கி வருகின்றனர். அதன் பின் வரன் தேடுபவர்கள் பெரிய தொகை முதலீடு செய்ததும், அதனை மோசடி செய்துவிட்டு தங்களது திருமணதகவல் போன்ற  அனைத்திலிருந்தும் வெளியேறி விடுகிறார்கள்.

இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது, வரன் தேடும் நபர்கள் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மணப்பெண் மற்றும் மணமகளின் சுய விவரங்கள் உண்மையானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். செல்போனில் வீடியோ அழைப்புகள் அல்லது  நேரடி சந்திப்புகளை தவிர்த்து ஆன்லைன் மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஒருபோதும் ஏற்கக்கூடாது.

இது போன்ற மோசடி கும்பல்கள் www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற முதலீட்டு வலைதளங்கள் மூலம் மோசடி சம்பவங்களை நிறைவேற்றுகின்றனர். சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகளை கண்டறிந்த நபர்கள் உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.