
இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் தாக்குதலில் காசா பகுதியில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவைகள் எதுவும் கிடைக்காமல் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தப் போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. அதன்படி நீண்ட முயற்சிக்கு பின் கடந்த மாதம் முதல் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
இது குறித்து இருதரப்பு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனால் காசாவில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி ஹமாஸ் அமைப்பு, ஆர் லெவி, எலி ஷராபி, மற்றும் ஓஹாத் பென் அமி ஆகிய 3 பணய கைதிகளை விடுவித்தது. இவர்கள் மூவரும் காசா செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் இஸ்ரேல் படையினரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். மூவரும் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது போல் காணப்பட்டனர்.
நிருபர்களிடம் விடுவிக்கப்பட்ட அமி கூறும் போது, டபுள் எக்ஸ் எல் (XXL) ஆக சென்ற நான் மீடியம்(M) அளவில் திரும்பி வந்துள்ளேன் என நகைச்சுவையாக கூறி சிரித்தார். மூன்று பேரும் தங்களது குடும்பத்தினரை கண்டவுடன் மகிழ்ச்சியுடனும், கண்ணீருடனும் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தனர். ஷராபி என்ற கைதி உயிருடன் திரும்பி வந்தபோதும் அவருக்கு துயரமே காத்திருந்தது. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் ஷராபியின் இரண்டு மகள்கள் மற்றும் மனைவி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஷராபிக்கு எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. மனைவியும் குழந்தைகளையும் எங்கே என கேட்டு கதறி அழுதார்.
மூன்று இஸ்ரேல் கைதிகளின் விடுவிப்புக்காக. 183 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் கைதிகள் மூவரும் கடத்தி செல்லப்பட்டபோது எடுத்த புகைப்படங்களும் தற்போது விடுப்புக்கு பின்னரான புகைப்படங்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு புகைப்படங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு காணப்பட்டது. அந்த அளவுக்கு உடல் மெலிந்து ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் காணப்பட்டுள்ளனர். இது இஸ்ரேல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.