குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள டெதியபாடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர் சைதர் வாசவா. இவர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி வளர்ச்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது இந்தக் கூட்டத்தில் தான் சிபாரிசு செய்த நபர்கள் உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெறாததை குறித்து சக்பரா கிராம பஞ்சாயத்து தலைவி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு இருந்த பஞ்சாயத்து தலைவர் சஞ்சய் வசவா குறுக்கிட்டு சைதரை சமாதானப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ தனது கையில் இருந்த செல்போனை பஞ்சாயத்து தலைவர் மீது எறிந்தார். மேலும் அங்கு இருந்த கண்ணாடி துண்டையும் சஞ்சய் மீது வீசியதால், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் எம் எல் ஏ சைதர் தன்னை தாக்கியதாக பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எம்.எல்.ஏ சைதரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று அவர் கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.