திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி அருகே குறும்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கணேசன்- சுதா தம்பதியினருக்கு சத்யவர்சன்(9) என்ற மகன் உள்ளார். சத்திய வர்ஷன் அங்குள்ள ஊராட்சி என்ற நடுநிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சத்தியவர்ஷன் அதே தெருவில் வசித்து வரும் மோகன் என்பவரின் காரில் கிறுக்கி வைத்ததாக நினைத்து சத்தியவர்ஷனை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பூட்டி வைத்து அடித்துள்ளார். பள்ளி சென்ற மகன் வீடு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அப்பகுதியில் தேடி வந்துள்ளனர்.

அப்பொழுது உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய இருவரும் சத்தியவர்சனின் அலறல் சத்தம் கேட்டு மோகன் வீட்டிற்குள் சென்றுள்ளனர். மேலும் மோகனிடம் சத்திய வர்ஷனை அடித்ததற்காக தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த மோகன் கத்தியால் செல்வராஜ் மற்றும் கருப்பாத்தாளை சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார். பின்பு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். காயமடைந்த இருவரும் அருகிலுள்ள அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை அடித்ததற்கு தட்டி கேட்ட இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.