
தென்கொரியாவில் இன்று 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இப்போட்டி வருகிற மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த தொடருக்காக 61 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 வீரர்கள் தமிழ நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் போட்டியின் முதல் போட்டியாக ஆடவருக்கான 20 மீட்டர் நடைப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் மற்றும் அமீத் ஆகிய இரு இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டி காலை 4:30 மணிக்கு தொடங்கியது. இதில் ஒரு மணி நேரம் 21 நிமிடம் மற்றும் 13 நொடிகளில் இலக்கை அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் செர்வின் செபாஸ்டியன் வெண்கலம் பதக்கம் வென்றார். சீன வீரர் வாங் முதலிடமும், ஜப்பானின் கெண்டோ இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். மற்றொரு இந்திய வீரரான அமீத் ஐந்தாம் இடத்தை பிடித்தார். இப் போட்டியில் மொத்தம் 15 வீரர்கள் பங்கேற்றனர்.