டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின் பிப்ரவரி 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக என 3 முக்கிய கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கெஜ்ரிவாலின் கட்டவுட்டை யமுனை ஆற்றில் மூழ்கச் செய்து பாஜக வேட்பாளர் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். புதுடெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளரான பர்வேஷ் வர்மா இன்று படகு ஒன்றில் ஏறி, யமுனை ஆற்றில் பயணம் செய்தார்.

அப்போது அவர் தன்னுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டவுட்டை எடுத்துக்கொண்டு சென்றார். அவருடன் கட்சி உறுப்பினர்கள் சிலரும் சென்றனர். ஆற்றின் நடுவில் அவரது உருவப்படத்தை ஊடகங்கள் முன்னிலையில் யமுனையில் பலமுறை மூழ்கடித்தார். அந்த கட்டவுட்டில் கெஜ்ரிவால் தனது இரு காதுகளையும் பிடித்திருப்பது போன்று இருந்தது. மேலும் நான் தோல்வி அடைந்து விட்டேன், 2025 க்குள் யமுனையை தூய்மைப்படுத்த தவறிவிட்டேன், எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தது.

அதன்பின் வர்மா கூறியதாவது, நாம் யமுனை ஆற்றை முழுமையாக தூய்மைப்படுத்த முடியும். அதை தூய்மைப்படுத்துவது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. பிரதமர் மோடி சபர்பதி நதியில் செய்தது போல, நாம் யமுனை ஆற்றையும் செய்ய முடியும். அதற்கு 11 வருடங்கள் என்பது மிகவும் நீண்ட காலம் என்று தெரிவித்தார்.