திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் இந்து மதம் அல்லாத மத நடவடிக்கைகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேபோன்று சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது பூர்விக ஊரான புத்தூரில் உள்ள தேவாலய பிரார்த்தனைகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ராஜசேகர் தேவாலயத்திற்கு சென்று பிராத்தனை செய்யும் வீடியோக்கள் தேவஸ்தானத்தின் கவனத்தின் கீழ் வந்ததால் அவர் மீது நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் இது போன்ற மத நடவடிக்கைகள் காரணங்களுக்காக ஆசிரியர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தேவஸ்தான பிற அதிகாரிகள் உட்பட 18 ஊழியர்களை இடமாற்றம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இதுபோன்று தேவஸ்தானத்தில் பணி புரிந்து கொண்டு இந்து மதம் அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.