உத்திரபிரதேச மாநிலம் காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 29-ம் தேதி அவரது மனைவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற பணம் இல்லாததால், தனது கணவனை வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார்.

இதனால் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செல்போன் நம்பரை வாங்கி தொடர்பு கொண்டு பேசி வாடகைக்கு பிடித்துள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக முன் பக்கத்தில் அமர்ந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால் அந்தப் பெண்ணின் சகோதரர் அவரது கணவருடன் இருந்துள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு, அவரும், உதவியாளரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அலறிய அந்தப் பெண்ணின் சத்தத்தை கேட்டு, அவரது கணவரும், சகோதரரும் சத்தம் போட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர், அந்த பெண்ணின் கணவரை ஆம்புலன்ஸில் இருந்து வெளியேற்றி, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த சுவாச கருவியையும் அகற்றியுள்ளனர்.

அதன் பின் அந்த பெண்ணிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும், தாலி செயின் மற்றும் கொலுசு போன்ற பொருட்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். அதன் பிறகு அந்த பெண் தனது கணவரை மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்தார், இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.