
மதுரை மாவட்ட சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் திருக்கோவிலில் இன்று தமிழ் திரைப்பட நடிகர் கிங் காங் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவருடன் அப்பகுதியில் நின்ற பக்தர்கள் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் கிங்காங் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இதுவரை மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்வை வெறும் டிவியிலும், சமூக ஊடகங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று எனக்கு அதனை நேரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது.
மேலும் கள்ளழகர் தரிசனம் இன்று எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது. அவருடைய ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும். தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் படத்தின் ஹீரோவாக நடிப்பது எம்.எஸ். கிருஷ்ணன் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. நகைச்சுவை நடிகர்களின் நடிப்பையும் மக்கள் ரசித்து ஏற்றுக் கொள்கின்றனர் இது வரவேற்கத்தக்க விஷயம்.
சினிமாவை நான் மனமாற விரும்புகிறேன். தற்போது 5 படங்களில் நடித்து வருகின்றேன். கடவுளின் ஆசியும் ரசிகர்களின் ஆதரவும் என்றும் எனக்கு உள்ளது. நடிகர் அஜித் தன்னம்பிக்கையின் உதாரணம்.
அவர் திரையுலகில் மட்டுமல்லாமல், தரையிலும் அதாவது, கார் ரேசிலும் ஹீரோவாக திகழ்கிறார் என கூறினார். அதன் பின் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு, கோயிலில் வைத்து அரசியல் கேள்வி வேண்டாம் என தவிர்த்து உள்ளார்.