திருவனந்தபுரம் விமான நிலைய IB அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி கடந்த மார்ச் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த பெண்ணை தவறாக பயன்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அதிகாரி சுகந்த் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது, அவரது டெலிகிராம் செய்தி ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டு, வழக்கில் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

போலீசார் கூறியதின்படி, பெண் அதிகாரி தற்கொலைக்கு முன் “நான் இறக்கப்போகிறேன்” என சுகந்திடம் கூற, அதற்கு அவர் “எப்போது இறக்க போகிறாய்? நான் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணணும்” என பதிலளித்திருக்கிறார். மேலும், அதற்குப் பதிலாக அந்த பெண் “ஆகஸ்ட் 9” என எழுதியதாகவும் அந்த உரையாடலில் தெளிவாக உள்ளது. இந்த தகவல் சுகந்த் சுரேஷின் கைபேசியிலிருந்து மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இறந்த பெண்ணின் கைபேசி முழுமையாக சேதமடைந்த நிலையில், அதன் தகவல்களை மீட்பது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறியிருந்தனர். சுகந்த் சுரேஷ் தற்போது வரை கைது செய்யப்படாத நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை அதற்கான தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த டெலிகிராம் உரையாடல் வழக்கில் திருப்புமுனையாகவும், சுகந்த் மீது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரமாகவும் அமைந்துள்ளது.