அமெரிக்காவில் வாழும் உலகிலேயே மிகப் பழமையான பறவை லேசன் அல்பாட்ராஸ் இனத்தை சேர்ந்த பறவையாகும். சமீபத்தில் இந்தப் பறவை இனத்தை சேர்ந்த விஸ்டம் என்ற பறவை தனது 74 வயதில் முட்டையை அடைகாத்து வருவது குறித்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில் அவர் கூறியதாவது,”இயற்கை ஒரு அபார சக்தி உடையது என்பதற்கு எடுத்துக்காட்டாக, விஸ்டம் பறவை தனது 74 ஆவது வயதில்  60-வது முட்டையை அடைகாத்து வருவது ஆச்சரியத்துக்குரியதாகும். மிகவும் பழமை வாய்ந்த விஸ்டம் விடாமுயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்தப் பறவை தனது வாழ்நாளில் 30 குஞ்சுகளை வளர்த்து, பரந்த பெருங்கடலில் எண்ணற்ற தொலைவுகள் பறந்து, தனது தலைமுறைகளை காப்பாற்றி உள்ளது. ஹவாயில் உள்ள மிட்வே தேசிய வனவிலங்கு பூங்காவை தனது புகலிடமாக கொண்டு வசித்து வருகிறது. இந்த நிலையில் தனது புகலிடத்திற்கு சென்ற பின் தனது 60வது முட்டையை ஈன்று அடைகாத்தும் வருகிறது. ஒவ்வொரு கடற்பறவைகளும் தங்களது புகலிடங்களை பாதுகாத்து தங்களது இனத்தை தொடர்ந்து அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுவதற்கு விஸ்டம் ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.