பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் சைஃப் அலிகான். இவர் கடந்த 16ம் தேதி தனது வீட்டில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இவருக்கு அறுவை சிகிச்சை வழங்கப்பட்டு, அதன் பின் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த சம்பவத்தால் வங்காள தேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது (30) என்பவரை கடந்த 16ம் தேதி அன்று காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே சைஃப் அலிகான் வீட்டில் இருந்து 19 கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. ஆனால் இதனுடன் குற்றவாளியான ஷரிபுல் கைரேகை பொருந்தவில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவினர். இதற்கு மும்பை காவல்துறை மறுப்பு தெரிவித்ததோடு, கைரேகை ஒத்துப்போகின்றதா? என்பதை குறித்த அறிக்கை ஆய்வகத்தில் இருந்து வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்டவரின் காவலை ஜனவரி 29ம் தேதி வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஷரிபுல் விசாரணை குழுவுடன் ஒத்துப்போகவில்லை என்றும், அவர் குற்றத்திற்கு பயன்படுத்திய ஆயுதத்தை எங்கு வாங்கினார் என்பதை குறித்து கூறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஷரிபுல் ரத்த மாதிரிகள் மற்றும் உடைகள் தடவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.