மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃஇன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில், ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மே 17 மாலை வெளியானது. சென்னை மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குநர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நடிகர்கள் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மிகவும் வலுவான நட்சத்திர வரவுடன், ரசிகர்களின் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.

விழாவில் பேசிய நடிகை அபிராமி, கண்ணீர் மல்கும் குரலில், “இது என்னால் பேச முடியாத தருணம். குட்டி திவ்யாவாக இருந்து இன்று அபிராமியாக மாறிய பயணத்தை நினைத்து பார்க்கிறேன். லவ் யூ மணி அண்ட் கமல் சார்,” என உருக்கமாகக் கூறினார். இதையடுத்து தொகுப்பாளர் விஜய், “அபிராமிக்கு கமல் சார் மீது தனி பாசம்.

அவருக்கு ‘அபிராமி’ என்று கமல் சார் சொன்னால் ஹேப்பியாகிவிடுவார்,” எனக் கூற, கமல்ஹாசன் தனது ‘குணா’ படத்திலிருந்து பிரபலமான டயலாக்கில், “அபிராமி… அபிராமி… அபிராமி…” என அழைத்தார். இதனால் உணர்ச்சியில் உருகிய நடிகை அபிராமி, மேடையிலேயே கமலை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தார்.

இந்த சிறப்புப் விழா, ரசிகர்களிடையே பெரும் பரவலான வரவேற்பையும், சமூக வலைதளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி தருணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘தக் லைஃப்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கும் முன்பே ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.