
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் பிரேம் (26). இவர் தனது குடும்பத்தினருடன் உறவுக்காரர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக நேற்று காலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கோவை- சென்னை இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தடைந்தது.
அப்போது ரயிலில் இருந்து பிரேம் மற்றும் அவரது குடும்பத்தினர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கி அனைவரும் சற்று தூரம் நடந்து சென்றுள்ளனர். அப்போது உறவினர் ஒருவர் தனது பையை ரயிலில் மறந்து வைத்து விட்டதாக கூறியுள்ளார்.
சில நிமிடத்தில் ரயில் புறப்பட தொடங்கியதும் பிரேம் தவறவிட்ட பையை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என வேகமாக சென்று ரயிலில் ஏற முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி ரயிலின் அடியில் விழுந்துள்ளார். இதனைக் கண்ட ரயில் நிலையத்திலிருந்த அனைவரும் கத்தி கூச்சலிட ரயில் ஓட்டுநர் ரயிலை உடனே நிறுத்தினார். அதன்பின் ரயிலின் அடியில் சென்று பார்த்தபோது பிரேம் ரயிலின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக கோவை- சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இச்சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.