
கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கே.எஸ் கோபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகலா. இவர் ஒரு ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார்(27). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தனது தந்தையுடன் இருசக்கர வாகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு அவரது வலது கையை இழந்தார்.
அதன் பின் அவருக்கு செயற்கை கை பொருத்தப்பட்டது. இதனால் அவர் எழுதுவது போன்ற எல்லா காரியங்களையும் இடது கையால் நிறைவேற்ற தொடங்கினார். சிறுமியாக இருந்த பார்வதி 10ம், 12ம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து முடித்த இவர் இடைக்கால பயிற்சிக்காக ஆலப்புழை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்.
அப்போது கலெக்டராக எஸ்.சுகாஸ் பணியாற்றியுள்ளார். உதவி கலெக்டராக கிருஷ்ண தேஜா இருந்துள்ளார். அப்போது அவர் அளித்த ஊக்கமும் அறிவுரையும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை பார்வதியின் மனதில் விதைத்தது. அதனால் கடினமாக உழைத்த பார்வதி கடந்த 2024 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 282 இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். தற்போது அவர் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.