உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில், தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை ஒரு தெரு காளை கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியேறியுள்ளது. இந்த சம்பவம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகி, அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

இரவு உணவுக்குப் பிறகு அந்தப் பெண் வீட்டிற்கு நடந்து செல்லும்போது, பின்னால் வந்த ஒரு காளை திடீரென தனது கொம்புகளால் அவரை தூக்கி தரையில் வீசி, தொடர்ந்து கால்களால் பல முறை மிதித்து தாக்கியது.

இந்த தாக்குதலில், அந்தப் பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரின் ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, மார்புப் பகுதியில் ஆழமான உள் காயங்களும் ஏற்பட்டுள்ளன. வீடியோவில் அவர் வலியால் துடிக்கிறார். ஆனால் காளை தொடர்ந்து தாக்குவது போன்ற காட்சிகள் தெளிவாக உள்ளன.

 

அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டு காளையை விரட்டியடித்து, உடனடியாக அந்தப் பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் கூறியதாவது, “பெண் இப்போது ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். அவருக்கு பிளாஸ்டர் போடப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு மற்றும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அவசியமாக இருக்கிறது” என்றனர்.

இந்த கொடூர சம்பவத்துக்கு பின்னர், அப்பகுதியிலுள்ள மக்கள் நகராட்சியின் மீது கடும் கோபத்தை வெளியிட்டுள்ளனர். “நகரத்தில் சுற்றித்திரியும் காளைகள், நாய்கள், மாடுகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் தெருவில் நடந்து செல்லும் போதே உயிர் ஆபத்துக்கு உள்ளாகும் அளவிற்கு நகராட்சி துறையின் அலட்சியம் அதிகரித்து வருகிறது என அவர்கள் விமர்சனம் செய்தனர். தற்போது, சம்பவம் நடந்த பகுதிக்கே சென்று சுற்றித்திரியும் விலங்குகளை பிடிக்கும் பணியை நகராட்சி துறையினர் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.