திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசந்திரனின் வீட்டில், கதவை பூட்டாமல் இருந்ததைப் பயன்படுத்தி பெண் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில், போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஜெயசந்திரன் அந்த பகுதியில் கைப்பேசி மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல அவர் திங்கள்கிழமை கடைக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது மனைவி வீட்டின் கதவை பூட்டாமல் குளிக்கச் சென்றிருந்தார்.

குளித்துவிட்டு வந்தபோது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த பொருள்கள் சிதறி கிடப்பதை கண்டுள்ளார். மேலும் பீரோவில் இருந்த ரூ.85,000 மற்றும் பாஸில் இருந்த ரூ.15,000 என மொத்தமாக ரூ.1 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் நடைபெற்ற வீட்டு முன் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் சிறுவனுடன் வீட்டு முன் நின்று பார்த்தவுடன், வீட்டுக்குள் நுழைந்ததும், சில நிமிடங்களில் வெளியே வந்து விரைந்து சென்றதும் பதிவாகியுள்ளன.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஜெயசந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பெண்ணை தேடி வருகின்றனர். தன்னிச்சையாக வீட்டு கதவை திறந்து நுழைந்து நடந்த இந்த திருட்டு சம்பவம், பாதுகாப்பு குறித்து பொதுமக்களிளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.