நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்து விட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் வாகனத்தில் இருந்து கொண்டே யானையை விரட்ட முயற்சி செய்தனர். அவர்களை பார்த்த யானை சாலையில் ஓடி சென்ற போது திடீரென கோபமடைந்த நிலையில் வனத்துறையினர் இருந்த வாகனத்தை நோக்கி வந்து தாக்கியது. அதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் வனத்துறையினர் சத்தம் எழுப்பினர்.

அவர்களின் சத்தத்தை கேட்ட யானை அங்கிருந்து வேகமாக காட்டுக்குள் சென்று விட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது, யானை தாக்குதலின் போது வாகனத்தில் சேதம் ஏற்பட்டது. ஆனால் வன ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த சம்பவம் நடந்து 3 வாரங்கள் ஆகிறது என்று கூறினார்.