அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முதுநிலை மாணவி ஜூபிதாரா ராவா. இவர் மேற்கு வங்காளத்தில் புத்தர் தினாத்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்சி பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்த நிலையில் ஜூபிதாரா ஒரு பயிற்சி வகுப்பின் போது அமில காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், வகுப்பிற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் வராததால் அந்த வகுப்பை பி.எச்டி படித்துக்கொண்டிருந்த மாணவர் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளது.

அப்போது பயிற்சி சமயத்தில் திடீரென ஒரு பரிசோதனை குழாய் நிலை இழந்து அதில் உள்ள சல்பியூரிக் அமிலம் மாணவியின் உடல் மீது சிந்தியுள்ளது. இதனால் அவரது மார்பு மற்றும் வயிறு பகுதிகள் தீவிரமாக எரிந்து காயம் அடைந்த உள்ளார். உடனடியாக அருகில் உள்ள ராய்கஞ்ச் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். உடல் முழுவதும் 25% தீக்காயம் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செரிகல்ச்சர் துறை தலைவர் சௌமேன் சாகா கூறியதாவது,”அமித் மொண்டால் என்ற பேராசிரியர் விடுப்பு குறித்து முன்னரே அறிவிக்காமல் விட்டதால் பயிற்சி வகுப்பு பி.எச்டி மாணவர் மேற்பார்வையில் நடந்துள்ளது. அவர் முன்னறிவிப்பு இல்லாமல் வகுப்பிற்கு வராமல் இருந்தது குறித்து பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அறிவுறுத்தல் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயிற்சி வகுப்புகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர். பேராசிரியர் இல்லாததால் ஏற்பட்ட தவறுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.