
போர்ச்சுகல் நாட்டில் உள்ள கடற்கரையில், அரிதாகவே காணப்படும் “உருளை மேகம்” ஒன்று தோன்றியதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த அற்புதமான இயற்கை நிகழ்வு, பார்வையாளர்களை மட்டுமல்லாது, நெட்டிசன்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
யூரோநியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, போர்ச்சுகலில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நேரத்தில் இந்த வானிலை நிகழ்வு பதிவானது. தெற்கு நாகமணி ஆசிரமம் அருகே உள்ள கடற்கரையில் உருவான இந்த உருளை மேகம், குழாய் வடிவத்துடன் கிடைமட்டமாக நகரும் வகையில் தோன்றியது. இது ஒரு பெரிய அலையைப் போலத் தெரிந்தாலும், சுனாமி போன்ற எந்த அபாயத்தையும் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவில், கடலிலிருந்து வெறித்தனமாக நகரும் மேகங்கள் கடற்கரையை நோக்கிச் செல்லும் காட்சி தெளிவாக காணப்படுகிறது. மேகங்கள் நெருங்கும் வேளையில் பலத்த காற்றும் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைப் பார்த்த கடற்கரை மக்கள் திகைத்துப் போனதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது 20,000-க்கும் மேற்பட்ட பார்வைகள், மற்றும் பல பாராட்டுகளையும் கருத்துகளையும் பெற்றுள்ளது.
Tsunami cloud in Portugal 🌊☁️ pic.twitter.com/LTwsUNzkUZ
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) June 30, 2025
நெட்டிசன்கள் இந்த அரிய நிகழ்வை வியப்புடன் எதிர்கொண்டுள்ளனர். சிலர், “என் பெற்றோர் சிறுவயதில் இதைப் பார்த்ததாகச் சொல்வார்கள், ஆனால் இப்பொழுது மீண்டும் பார்க்க முடிகிறது என்பது ஆச்சர்யம்,” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், “ஆஹா, இது ஒரு அலை மாதிரி இருக்கு!” என்றும், “இது அபசகுனமா இருக்கே!” என்றும் பல்வேறு வகையில் மக்களின் உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன.
வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு ஆர்கஸ் வகை மேகமாகும், வெப்ப காற்றும் குளிர்ந்த காற்றும் சண்டையிடும் போது உருவாகும் இந்த உருளை மேகம், வானிலை மாறுபாடுகளின் விளைவாக தோன்றுகிறது. போர்ச்சுகலின் வடக்கு மற்றும் மைய பகுதிகள், தற்போது வெப்பக்காற்றால் சூழப்பட்டுள்ளதால், தேசிய சிவில் பாதுகாப்பு ஆணையம் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், அல்கார்வே உள்ளிட்ட பகுதிகளில் காட்டு தீ அபாயம் மிகுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.