
அமெரிக்காவில் அதிர்ச்சிகரமான விலங்கு கொடுமை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அலபாமா மாநிலத்தின் அட்மோர் பகுதியில் வசிக்கும் ஜேம்ஸ் வில்லியம் (வயது 44) என்பவர், தனது வீட்டில் வளர்த்த சிகுவாவா நாய்க் குட்டி அதிகமாக குரைத்துக்கொண்டு இருந்ததால், அதனை அடுப்பில் வைத்து வேகவைத்து கொன்றுள்ளார். மே 19ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், அவர் நாயை அடுப்புக்குள் வைத்து, அதை ஆன் செய்ததோடு, நாய் வெளியே வர முடியாதவாறு கதவுக்கு எதிரே நாற்காலியையும் வைத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
நாயின் கத்தும் சத்தத்தை கேட்ட அண்டை வீட்டுக்காரர்கள், உடனே போலீசாரை அழைத்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற அட்மோர் போலீஸ் சார்ஜன்ட் டெரல் மெக்மான், செல்லும் வழியில் இறந்த நிலையில் நாயைக் கண்டதாக கூறினார். அவரும் ஒரு சிகுவாவா நாயை வளர்த்து வருவதால், அந்தக் காட்சியைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கொடுமை சம்பவத்துக்குப் பிறகு, ஜேம்ஸ் வில்லியம் மீது ‘கடுமையான விலங்கு கொடுமை’ குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்து, 15,000 அமெரிக்க டாலர் பிணையில் விடுவிக்கத் தயாராக உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் விலங்குகள் வளர்க்கும் உரிமையிலிருந்து அவரை நிரந்தரமாக விலக்க வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, “விலங்கு கொடுமை சட்டங்கள் மேலும் கடுமையாக இருக்க வேண்டும்” என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.