
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அருகே முழுந்த் பகுதியில் கடந்த மே 5ஆம் தேதி இரவு காவல்துறையினர் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த ஒரு கார் வேகமாக வந்து ஒரு இரும்பு கம்பத்தின் மீது மோதியது.
உடனே அந்தக் காரை ஓட்டி வந்த இளைஞர் காவல்துறையினரை பார்த்ததும் வேகமாக காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். அவரிடம் காரை நிறுத்துமாறு காவல்துறையினர் கூறியும் கேட்காதது போல் அந்த நபர் வேகமாக காரை எடுத்துக் கொண்டு சென்றார். அதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தங்களது ஜிப்பில் வேகமாக அந்த காரை துரத்திச் சென்றனர்.
ஒரு சினிமா கார் சேஸிங் போல நடந்த சம்பவத்தில் வேகமாக சென்ற கார் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 7 கார்கள் மீது இடித்துக் கொண்டு வேகமாக சென்றது. சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று விரட்டி விக்ரோலி பகுதியில் அந்தக் காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அதன் பின் காரை ஓட்டிய இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காரை ஓட்டிய இளைஞரின் பெயர் கரண் மோஹிதே (26) என்பது தெரிய வந்தது. அவர் மது ஏதும் அருந்தவில்லை. மாறாக இரும்பு கம்பத்தின் மீது கவனமின்மையால் மோதியதால் காவல்துறையினருக்கு பயந்து அவர்கள் நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.