
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கொட்டாக்கரை கிராமத்தில் வசிப்பவர் அனிஷ். இவருக்கு பிந்து என்ற மனைவி உள்ளார். அனீஸ் – பிந்து தம்பதியினருக்கு யாதவ் (8) என்ற மகன் இருந்துள்ளார். யாதவ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று இரவு 7.30 மணி அளவில் யாதவின் பாட்டி அப்பகுதியில் உள்ள கால்வாயின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது யாதவ் பாட்டியிடம் செல்வதற்காக ஓடி சென்றுள்ளார். அந்த நேரத்தில் தெருவில் நின்ற நாய் ஒன்று யாதவைப் பார்த்து குறைத்துக் கொண்டே ஓடிவந்தது.
இதனால் பதற்றத்தில் யாதவ் வேகமாக ஓடியுள்ளார். நடைபாதையின் மேல் வேகமாக ஓடியதால் கால் இடறி கால்வாயில் உள்ளே விழுந்துள்ளார். கால்வாயில் விழுந்ததும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்த யாதவின் பாட்டி பதற்றத்தில் அக்கம் பக்கத்தினரிடம் கூச்சலிட்டு கத்தி உதவி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் அங்கு விரைந்து வந்த மீட்பு படையினர் கால்வாயில் விழுந்த சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர தேடலுக்கு பின் கால்வாயில் நிரப்புவிளை பகுதியில் யாதவ் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாதவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய் துரத்தியதில் கால்வாயில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது