மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். இதில் கணவர் குடி போதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தன் மகனுடன் மனைவி தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சிறுவன் திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனான். உடனடியாக சிறுவனை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அன்றைய தினம் இரவு தந்தையின் வீட்டின் வாசலில் சடலமாக மீட்கப்பட்டான்.

அது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேப்பரை திணித்து சிறுவனை கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது மதுபோதையில் இருந்த சிறுவனின் தந்தை நோட்டு புத்தகத்தில் உள்ள பேப்பரை கிழித்து பந்து போன்று செய்து சிறுவனின் வாயில் திணித்துள்ளார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக இறந்தான். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.