
மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கியமானதாக விளங்கும் சவுதி அரேபியா, கடந்த 73 ஆண்டுகளாக மதுபானங்களைத் தடை செய்து வருகிறது. இந்த நாட்டில், மதுபானங்களை உற்பத்தி, விற்பனை, உட்கொள்வது அனைத்தும் சட்டவிரோதம். இதன் காரணமாகவே, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காக செல்லும் வெளிநாட்டவர்களும் அந்த விதிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சவுதியில் மதுவிலக்கை நீக்கும் திட்டம் உருவாகியுள்ளது என சில சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டன. 2034-ஆம் ஆண்டு சவுதியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக இது நடப்பதாக கூறப்பட்டது.
2026க்குள் படிப்படியாக மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதனால், சமூக வலைதளங்களில் விவாதங்களும் உருவாகின. சவுதியில் உள்ள இஸ்லாமிய புனித தலங்கள் இருப்பதால், மதுபான அனுமதி எதிர்ப்புக்கு ஆளானது.
இந்த நிலையில், சவுதி அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்து, “மதுவிலக்கை நீக்கும் திட்டமே எங்களிடம் இல்லை. தற்போதுள்ள தடை முற்றிலும் தொடரும்” எனத் தெளிவுபடுத்தினர். கடந்த ஆண்டே ரியாத்தில், வெளிநாட்டு தூதர்களுக்காக மட்டுமே சிறிய அளவில் மதுக்கடை இயங்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால், பொதுமக்களுக்கு மதுவிற்பனை இல்லை. தற்போது முகமது பின் சல்மான் தலைமையிலான சவுதி அரசு, பெண்களுக்கு வாகன ஓட்ட அனுமதி, கலாச்சார தளர்வுகள் போன்ற பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தாலும், து விற்பனைக்கு அனுமதி இல்லை என கூறியிருப்பது என்பது இந்த விளக்கத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.